செய்திகள்

4tamilmedia செய்திகள்

↑ உங்கள் தளத்திலும் இணைக்க!

Monday, September 27, 2010

commenwealthgames

காமன் வெல்த் விளையட்டுகள்</span>
னக்கு ஒன்று புரியவில்லை, நமது நாடு சுதந்திரநாடா? அடிமை நாடா?. இன்னும் எதற்கு ஆங்கிலேயர்களின் அடிவருடவேண்டும். அறுபது ஆண்டுகளுக்குபிறகும் நம்முடைய அடிமைத்தனத்தை விடமுடியவில்லை. நம் நாட்டின் ஒரு மாநிலத்தின் அளவுகூட இல்லாத நட்டிற்கு, நாம் எதற்காக இன்னும் விட்டுக்கொடுக்கவேண்டும். உடனடியாக நாம் இந்த காமன் வெல்த் அமைப்பில் இருந்து வெளியேறவேண்டும். இல்லையென்றால் நாம் இன்னும் அவர்களுக்கு அடிமைகள்தான் என்பது உறுதியாகிறது. இது நம் நாட்டின் நூறு கோடி மக்களுக்கும் அவமானமாகும். இந்த விளையாட்டை சார்லஸ்தான் ஆரம்பித்துவைக்கவேண்டும் என்றால் அதைவிட மீண்டும் நம் நாட்டை ஆளும் உரிமையை அவர்களிடமே கொடுத்துவிடலாம்.அவர்கள் என்ன நாம் கேட்டவுடன் நாட்டை நம்மிடம் கொடுத்துவிட்டார்களா?. எத்தனை உயிர்பலி எவ்வளவு போராட்டம். சுதந்திரத்திற்கு பிறகு பிறந்த எனக்கே இவ்வளவு ரத்தம் கொதிக்கிறது என்றால், நம் தலைவர்கள் இருந்தால் அவர்களின் மனம் எவ்வளவு கொதிக்கும்? ஆயிரம் குறைகள் நம்மிடம் இருக்கலாம் ஆனால் அதைவத்து அடுத்தவர் விளையாட இடம் கொடுக்கக்கூடாது. உடனடியாக நாம் காமன்வெல்த் அமப்பில் இருந்து வெளியேறவேண்டும். அது ஒன்றுதான் நம் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு செய்யும் மிகச்சிறந்த மரியாதையாகும்!

Sunday, September 19, 2010

10

வலியது வெல்லும்

ஒருமுறை ஏதோ விசயமாக மதுரையில், அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன். காலை ஏழு மணி இருக்கும், காபியையும், பேப்பரையும் ஒருசேர ரசித்து விழுங்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு இளைஞர் வந்தார். அக்காவை மாமி என்று அழைத்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார். நான் கண்டுகொள்ளவில்லை. அவர்களின் பேச்சு முடிந்ததும் அக்கா என்னிடம், “இவர் நமது பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்கள் வீட்டு பையன், இப்போ மெட்ராசில் (சென்னை) சட்டம் படிக்கிறார். நானும் அவரிடம் என்னைப்பற்றி கூறினேன். இருவரும் விலாசங்களை பரிமாறிக்கொண்டோம். அவர்து பெயர் சுல்தான் அலாவுதீன் என்று தெரிந்துகொண்டேன். மாமா வீட்டில் இருந்தால், அப்பொதெல்லாம் பயம். அளவுக்கு அதிகமாக பேசமாட்டோம். ஏதோ ரிங்மாஸ்டரைப் பார்த்த விலங்குகள்போல் அமைதியாக இருப்போம். அவ்வளவு மரியாதை. அவர் அப்போது தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக(revenue inspector) இருந்தார். பின்னர் தாசில்தாராக ஓய்வு பெற்றார். நான் சின்னப் பையன் என்பதால், பையை கொடுத்து ஆட்டுகறி மற்றும் காய்கறிகளை என்னத்தான் வாங்கிவரச்சொல்வார்கள். மாமாவுக்கு ஒரு தங்கை. என்னைவிட வயதில் மூத்தவர். கல்லூரி முடித்து வீட்டில் இருந்தார். படிப்பே இல்லாத ஒருவரை காதல் திருமணம் செய்து, மூன்றாவது பிரசவத்தின்போது இறந்துவிட்டார். அதை முடித்து நான் சென்னை திரும்பினேன்.

சிலநாட்களுக்குப்பிறகு, புதிய ந்ண்பரை சந்திக்க சென்றேன். அவர் சூளை பகுதியில் த்ன் ந்ண்பருடன் அறை எடுத்து த்ங்கி இருந்தார். அந்த ந்ண்பர் பாடியில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.எல்லோரும் அறிமுகம் செய்துகொண்டோம். அவர் பெயர் நாரயணமூர்த்தி. இவரது உதவியால்தான், அலாவுதீன் சட்டம் படிக்கிறார் என்பதை உணர்ந்தேன். அலாவுதீனின் வாப்பா(அப்பா), காவல்துறையில் த்லைமை காவலராக இருந்தார். அவர் வேறு ஒரு பெண்ணை மணந்துகொண்டு தனியாக இருந்தார். சூளையில் இருந்து சட்டக் கல்லூரி (பாரிமுனை) செல்ல பேருந்துக்குக்கூட காசில்லாமல் (பதினைந்து பைசா) நடந்து செல்வார்.அப்போது நானும் பலமுறை அவருடன் சென்றுள்ளேன். அது மட்டுமல்ல. பல நாட்கள் அவருடன் வகுப்புகள் இருந்து பாடம் கேட்டுள்ளேன் அவருடைய நிலைகண்டு நானும் உதவ ஆரம்பித்தேன். இந்த நட்பு வட்டத்தில் எனது அண்ணனும் சேர்ந்தார். வட்டம் பெரிதாகி ஒரு நிலயில் 15 பேர் வரை உயர்ந்தது. நாங்கள் தினசரி கடற்கரையில் சந்திக்க ஆரம்பித்தோம். ஒருவருடம் நாங்கள். 365 நாட்களும் கடற்கரையில் சந்தித்துள்ளோம். பெரும்பாலும் புகாரி ஓட்டல் பின்புறம் உள்ள மணலில்தான் அமருவோம். அங்குதான் வியாபரிகளின் தொல்லை இருக்காது. அந்த வட்டத்தில் வேலை செய்பவர், படிப்பவர், வேலை இல்லாதவர் என எல்லோரும் சமமாக பழகி வந்தோம். அவர்களில் ஒருவர்தான், நாடக எழுத்தாளராக ஆகி, பின்னர் வேதம்புதிது ப்டத்திற்கு கதை வசனம் எழுதி, அதனால் தனது டிவிஎஸ் வேலையை இழந்து தற்போது வேத்ம்புதிது கண்ணனாக இன்று திரை உலகத்தில் இருப்பவர். அப்போது எனக்கு L.I.C.யில் வேலை கிடைத்தது.

Tuesday, September 14, 2010

9

நான் அப்போது எந்த வேலையிலும் இல்லாமல் சும்மா சுற்றிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் பத்திரிக்கை உலகம் என்னை அழைத்தது. முதன்முதலில் “மினி ஸ்டார்” என்று ஒரு திரைப்பட பத்திரிக்கையில் பணி புரியும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் ஆசிரியர் மற்றும் முத்லாளி திரு “ஜாசன்” என்பவர். அவர் அப்போது சென்னை ஆவனக்காப்பகத்தில் பணி புரிந்தார். அவர் துணைவியார் வேறு ஒரு அரசு அலுவலகத்தில் பணி புரிந்தார். திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் அவர்களின் வீடு.. அதிலேயே அலுவலகம்.. அவர் காலையில் நான் செய்யவேண்டிய வேலைகளை என்னிடம் சொல்லிவிட்டு அலுவலகம் செல்வார். நான் பத்திரிக்கைக்கு வேண்டிய விசயங்களை சேகரித்து, அவற்றை ஒருங்கிணைத்து அச்சகம் கொண்டு செல்லவேண்டும்.இப்போதுபோல் இல்லை,மொத்த செய்திகளையும் சேகரித்துக்கொண்டு, தேவையான படங்கள் மற்றும் தலைப்புகளை முதலில் ஒரு ஓவியரிடம் கொடுத்து நமது கற்பனைக்கு ஏற்றவாறு டிசைன் செய்து, அதனை அவர் வரைந்துகொண்டு வந்தபிறகு, அவற்றை ”பிளாக்மேக்கர்” இடம் கொடுத்து அவற்றை பிளாக் செய்து,எல்லாவற்றையும் அச்சகத்தில் தலைமை அச்சுகோர்ப்பாளரிடம் சேர்த்துவிட்டு, மேலும் தேவையான அதிகப்படியான விசயங்களையும் எடுத்துக்கொண்டு அச்சகம் செல்லவேண்டும்.. அங்கு அவர்கள் அச்சுகோர்த்த பக்கங்களை கை அச்சில் பதிந்து தருவார்கள். அந்த பக்கங்களை பிழை திருத்தி மீண்டும் மீண்டும் சரிபார்த்து, அன்று அச்சுகோர்த்த பக்கங்களை எடுத்துக்கொண்டு இரவு எந்நேரமானாலும் ஆசிரியரிடம் சென்று அவற்றை கொடுத்துவிட்டுத்தான் வீட்டிற்கு செல்லவேண்டும். அப்போதுதான் அவர் அந்த பக்கங்களை சரிபார்த்து, மறுநாள் காலை என்னிடம் கொடுத்து அவற்றை அச்சில் ஏற்ற அனுமதிப்பார். அவற்றை நான் அச்சகத்தில் கொடுத்து அச்சில் ஏற்ற சொல்லவேண்டும். பின்னர் மீண்டும் அடுத்தடுத்த பக்கங்களை அவ்வாறே செய்யவேண்டும். இதற்கிடையில், நாம் கொண்டுவந்த செய்திகள் பக்கங்களை நிரப்ப போதவில்லையென்றால் நாமாகவோ அல்லது அங்கிலப் பத்திரிக்கைகளில் இருந்து செய்திகளை மொழிபெயர்த்தோ நிரப்பவேண்டும். சிவகாசியில் இருந்து அட்டை வண்ணத்தில் அச்சடித்து தயாராக வந்துவிடும். அதையும் அச்சகத்தில் கொடுத்துவிட்டால், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து புத்தகமாக கொடுத்துவிடுவார்கள். அது ஒரு மாத பத்திரிக்கை , மாதத்திற்கு 10,000 முத்ல் 15,000 வரை அச்சடிப்போம். மேலும் அந்த பிரதிகளை அலுவலகம் கொண்டுவந்து இரயில் மற்றும் தபால் மூலம் அனுப்ப, பண்டல்களாக கட்டியெடுத்து இரயில், தபால் அலுவலகங்களுக்கு சென்று அவற்றை அனுப்பிவிட்டு வந்து அலுவலகத்தில் அமர்ந்தவுடன் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அத்ற்கு ஈடு இணையே இல்லை. எனக்கு அப்போது சம்பளம் வாரம் 50 ரூபாய். அச்சகத்தில் வேளை முடிந்தவுடன் மாதாமாதம் 50 ரூபாய் கொடுப்பார்கள். ஒரு அடையாள அட்டை பத்திரிக்கையாளர் சங்கத்தில் கொடுப்பார்கள். அதன்மூலம் நாம் புதிய படங்களின் “பிரிவியு” மற்றும் நடிகர்கள், திரைப்பட பிரபலங்களை பேட்டி எடுப்பது போன்ற பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். புதிய படங்கள் வந்தால், அவற்றைப்பார்த்து நாம்தான் விமரிசனம் எழுதவேண்டும். அக்காலத்தில், கமலஹாசன், ஜெய சித்ரா, ஜெயசுதா, போன்றவர்களை பேட்டி எடுத்துள்ளேன். இதனால் இன்னொரு பலன் கிடைத்தது. அது பல இலக்கியங்களை படிக்க நல்ல திரைப்படங்கள் பார்க்கும் சந்தர்ப்பம் ஆகியன.

Wednesday, September 8, 2010

8
ஸ்கார்னர்! சென்னையின் பரபரப்பான இடங்களில் ஒன்று. அக்காலத்தில் நாங்கள் காலை 7 ம்ணிக்கே லாட்டரி வியாபாரத்தை ஆரம்பித்துவிடுவோம். மக்கள் வரிசையில் நின்று வாங்குவார்கள். ஏனென்றால் எல்லோருக்கும் லட்சாதிபதி ஆகவேண்டும் என்கிற அவா!. காலை 10 மணிக்குள் மூவரும் சேர்ந்து ரூ.300 முதல் ரூ.400 வரை வியாபாரம் செய்துவிடுவோம். அண்ணன் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, திருவல்லிக்கேணியில் உள்ள மொத்த வியாபாரியிடம் சென்று சீட்டுகளை வாங்கிவருவார். மாலை வியாபாரியிடம் கணக்கை ஒப்படைத்தபின்பு மீதமுள்ள தொகையை நங்கள் மூவரும் பங்கிட்டுக்கொள்வோம். ( இது தவறு என்று அப்போது தெரியவில்லை)ஒரு பங்கை நண்பருக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ள இரண்டு பங்கை அண்ணன் வீட்டிற்கு கொண்டுவருவார். பின்னர் அண்ணன் துறைமுகத்தில் பணிபுரிபவர்களின் உத்வியோடு அங்கு தற்காலிக பணியில் சேர்ந்தார். அங்கு கப்பல்கள் குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்தப்பட்டுவிடும். அங்கிருந்து சிறிய படகுகளின் உதவியோடு துறைமுகத்தின் உள்ளே இழுத்து வருவார்கள். அந்த சிறிய படகில்தான் அண்ணனுக்கு வேலை. அதில் உள்ள கனமான கயிறுகளை பயன்படுத்துவதால், பழக்கமில்லாத கைகளில் வரிவரியாக இரத்த காயங்கள். அதைப்பார்த்து அம்மா கோழியிறகால் எண்ணை த்டவிக்கொண்டே கண்ணீர் விடுவார்கள். அதைப்பார்த்து நாங்களும் கண் கலங்குவோம். இந்த நேரத்தில்தான் அப்பாவுக்கு ”முசிறிபுத்தன்” அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பா அவருடைய பேட்டரி பிரிவில் பணிபுரியும் 20 பேர்களை வேலை வாங்கும் மேலாளராக சேர்ந்தார். அங்கு பழைய கார், லாரி பேட்டரிகளை விலைக்கு வாங்கி அதை பிரித்து அதிலுள்ள ஈயத்தை பிரித்தெடுத்து, EXIDE, AMCO போன்ற நிறுவனங்களுக்கு விற்பது மற்றும், மின் கலன்களுக்கான NEGATIVE, POSSITIVE பிளேட்டுகளை தயாரித்து அனுப்புவது ஆகிய வேலைகள் நடந்துவந்தன. ஆனால் அங்கு பணிபுரிந்ததன் காரணமாக, அவர் அங்கிருந்த இரசாயனங்களை சுவாசித்து விரைவில் உடல்நலமிழந்தார். அதற்கு முன்பாகவே முசிறிபுத்தன் அவர்களிடம் அண்ணனைப்பற்றி சொல்லி வைத்துள்ளார். அந்த் நேரத்தில் அவருக்கும், தான் நடத்திக்கொண்டிருந்த “அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற” த்திற்கு அலுவலகத்தை பார்த்துக்கொள்ள நல்ல ஒரு ஆள் தேவைப்பட்டுள்ளது. உடனே அண்ணனை வரச்சொல்லி, அவரின் கையெழுத்து எவ்வாறு உள்ளது என்று பார்த்து, உடனே மன்றத்தின் அலுவலக பொறுப்பாளராக நியமித்துவிட்டார்.
அது முதல் வாழ்க்கையில் கொஞ்சம் வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது.

Sunday, September 5, 2010

7

ருவாறாக நானும் அப்பாவும் லாரியைப் பிடித்து சென்னைக்கு 68 ஆக்ஸ்ட் 15 அன்று வந்து சேர்ந்தோம். கோடம்பாக்கத்தில், அப்பாவின் நண்பரின் வீட்டில் (ஒரு அறை, ஒரு அடுப்படி) தங்கினோம். அன்று மாலை அன்றைய முதல்வர் அண்ணா அவர்கள் பேசிய கூட்டத்திற்கு அப்பா அழைத்து சென்றார். இரண்டு நாட்கள் என்னை விட்டுவிட்டு அப்பா மட்டும் வெளியில் சென்றுவந்தார். மூன்றாம் நாள் என்னை அழைத்துக்கொண்டு மவுண்ட் ரோட் (த்ற்போதய அண்ணா சாலை) அகூர்சந் கட்டிடத்தில் (காயிதேமில்லத் கல்லூரி எதிரில் உள்ள சிவப்பு கட்டிடம்) உள்ள ரேடியோ கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டர். ஒரு நாளைக்கு மூன்று ரூபாய் சம்பளம். காலை பத்துமணிக்கு சென்றால் இரவு 9 மணி ஆகும். ஒரு ரூபாய் தினசரி பேட்டா. அதில்தான் என்னுடைய காலை ம்ற்றும் பகல் உணவை பார்த்துக்கொள்ளவேண்டும். அப்போது அது ஒன்றும் பெரிய விசயமில்லை. ஒரு இட்லி 5 பைசா, தோசை 15பைசா. காபி 10 பைசா. இந்த விலை உடுப்பி ஓட்டலில். அப்போது எல்லோருமே உடுப்பி ஓட்டலில்தான் சாப்பிடுவார்கள். அந்த ஒரு ரூபாயிலும் மீதி இருக்கும். அதை சேர்த்துவைத்து ஞாயிற்று கிழமைகளில் திரைப்படம் பார்ப்பேன். திரைப்படம் பார்க்க 60 பைசா அல்லது 80 பைசா இருந்தால் போதும். அப்பா ராயப்பேட்டையில் இருந்த ஒரு அப்பள கம்பெனியில், பாக்கட்டுகளை சைக்கிளில் சென்று கடைகளுக்கு விநியோகிக்கும் வேளையில் சேர்ந்தார். நானும் அவரும் அந்த கம்பெனியில் தங்கிக்கொள்ள அனுமதி பெற்றார். முதல்நாள் காலை எனக்கு டிபன் வாங்கிக்கொடுத்து, கடையில் விட்டு சென்றார். திரும்ப வரும் வழியையும் சொல்லிக்கொடுத்தார். இரவு 9 மணிக்கு நான் கடையில் இருந்து புறப்பட்டு அங்கு சென்றேன். இரவு உணவு அங்குதான். முகம் கழுவி சாப்பிட உட்கார்ந்தேன். ஒரு அலிமினிய தட்டில் குவியலாக சோறும், அதன்மேல் சிறிய கிண்ணத்தில், ஒரு பெரிய துண்டு மீனுடன் குழம்பும் இருந்தது. நான் ஓ வென்று அழ ஆரம்பித்துவிட்டேன். ஏனென்றால், நான் அதுவரை மீன் குழம்பு சாப்பிட்டதில்லை. அன்று இரவு எப்படியோ கழிந்தது. நாட்கள் நகர்ந்தன. ஊரில் நான் கணித்தில் அதி மதிப்பெண் (96/100) பெற்றதற்காக, பள்ளியில் விழா நடத்தி பரிசுகள் வழங்கி உள்ளனர். நான் அங்கு இல்லாததால் அம்மா மேடையேறி அந்த பரிசுகளைப் பெற்றிருக்கிறார். அப்பொதெல்லாம் அஞசல் அட்டைதான் தொடர்பு சாதனம். செய்தி வந்துசேர ஒருவாரம் ஆகும். அவசர செய்தி என்றால், அஞ்சல் அலுவலகம் சென்று ‘டிர்ங்கால் புக் செய்து காத்திருக்க வேண்டும். (அதுவும் நம் ஊரில் அஞ்சல் அலுவலகம் இருக்கவேண்டும், அல்லது யார் வீட்டிலாவது தொலைபேசி இருக்கவேண்டும். அப்போதுதான் தொடர்புகொள்ள முடியும்.) தொடர்பு கிடைத்தவுடன் சப்தமாக பேசவேண்டும். ரகசியமான விசயங்களைப் பேச முடியாது. பின்னர். நடுகுப்பம்.(லாயிட்ஸ் சாலை கடற்கரை முனை) பகுதியில் மாதம் 40 ரூபாய் வாடகைக்கு (கழிவறை கிடையாது. குளியல் அறை மட்டும் உண்டு.) ஒரு வீட்டை ஏற்பாடு செய்தார். அம்மா, அண்ணன் தங்கை மூவரும் வந்துசேர்ந்தார்கள். அதன் பின்னர் நான் வேலை செய்த கடை பிடிக்காமல். அப்பாவின் பழைய ந்ண்பரின், வெலிங்டன் திரை அரங்கின் முன்னால் இருந்த ஜெய்சி பிரத்ர்ஸ்’ என்ற பல்பொருள் கடையில் சேர்த்துவிட்டார். அண்ணன் லாட்டரி சீட்டு கடை நடத்தும் ஒருவரிடம், வேலைக்கு சேர்ந்தார்.

அவருக்கு மூன்றரை ரூபாய் சம்பளம். அனால், ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐநூறு ரூபாய் இருந்தால் சொந்தமாக கடை வைக்கலாம். ஆனால் அதற்கு வழி தெரியவில்லை. லஸ் கார்னரில் அவர் கடை. கடை என்றால் ஏதோ என்று நினைக்க வேண்டாம். ஒரு சிறிய பிளைவுட் ஸ்டாண்ட், கொஞ்சம் பேபர் கிளிப்புகள். சாலையோர நடைபாதையில்தான் கடை. பின்னர் நான், ம்ற்றும் ந்ண்பர் ஒருவர் ஆக மூன்றுபேர் அங்கு சேர்ந்தோம்.

Friday, August 27, 2010

6
ன்னுடய படிப்பு என்பது எஸ்.எஸ்.எல்.சி யுடன் முடிவுக்கு வந்தது. தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே, ஒரு நாள் இரவு
சாப்பிடும்போது, அம்மா சொன்னார்கள்,”எப்படியோ படிக்கவைத்துவிட்டோம். இதற்குமேல் குடும்ப நிலைமை, உங்களை (என்னையும் ,அண்ணனையும்) படிக்கவைப்பதற்கு ஏற்றதாக இல்லை. அவனும்(அண்ணன்) படித்துவிட்டு ஊர் சுற்றுகிறான். நீயும் அவ்வாறு கெட்டுப்போகக்கூடாது. எனவே
நாளை நீயும் நயினாவும்(அப்பா) சென்னை செல்கிறீர்கள்”.என்று சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.” நானும் அண்ணனும், நீங்கள்சென்று வீடு போன்றவற்றை ஏற்பாடு செய்தபிற்கு வருகிறோம்.. நீ ந்யினா சொல்வதுபோல் கேட்டு நடக்கவேண்டும்.. ”என்று அறிவுரை கூறினார்கள். இந்த இடத்தில் ஒன்றைக் சொல்ல வேண்டும். எங்கள் அக்காவீட்டில் அண்ணனை கல்லூரியில் படிக்கவைப்பதற்கு, (அம்மா பணம் கொடுக்கிறோம் என்று சொல்லியும்கூட) மறுத்துவிட்டார்கள். அடுத்தநாள் காலை நானும் அப்பாவும் நகை ஒன்றை எடுத்துக்கொண்டு, அதை அடமானம் வைத்து பணம் பெறுவதற்காக சைக்கிளில் சோழவந்தானுக்கு சென்றோம்..எங்கள் ஊரிலிருந்து சோழவந்தான் 5 மைல் இருக்கும். நீரேத்தான் என்ற இடம்வரை நெடுஞசாலை, பின்னர் சாலை மிகவும் குறுகலாக இருக்கும்(இன்றும் அப்படித்தான் உள்ளது.) அப்பாதான் சைக்கிளை ஓட்டினார். நீரேத்தானிலிருந்து சோழவந்தான்வரை சாலை தலைகீழாக இருக்கும்.. நாம் பெடலை மிதிக்க வேண்டியதில்லை, பிரேக்கைத்தான் பிடிக்கவேண்டும். அவ்வாறு செல்லும்போது, எங்களுக்கு முன்னால் ஒரு காலியான மாட்டுவண்டி சென்றுகொண்டிருந்தது. எதிரே மதுரை செல்லும் சுதந்திரம் டிரான்ஸ்போர்ட்பேருந்து வந்தது. அப்பாவால் சமாளிக்கமுடியாமல், மாட்டுவண்டிக்கு இடதுபுறமாக சைக்கிளை ஒதுக்கினார். தடுமாறியதில் இருவரும் சைக்கிளோடு வாய்க்காலில் விழுந்தோம். நான் வாய்க்கால் பள்ளத்தில் இருந்து தலையை தூக்கி பார்த்தபோது, மாட்டின் பின் காலுக்கும், வண்டியின் சக்கரத்திற்கும் நடுவில் அப்பா விழுந்தார். வண்டியின் சக்கரம் அப்பாவின்மேல் ஏறி இறங்கியது. அந்த வண்டி பாரம் ஏற்றபடாத்தாலும், அப்பாவின் இடுப்பு எலும்புகளின்மேல் ஏறி இறங்கியதாலும் அவருக்கு அதிகமான பாதிப்பு ஏற்படவில்லை.
சிறுவயது என்பதால் என்னால் அழுவதைத்தவிர ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்த மாட்டுவண்டியிலேயே மயக்கமுற்ற அவரை படுக்கவைத்து, அழுதுகொண்டே சைக்கிளை த்ள்ளிக்கொண்டு பின்னால் சென்றேன். சோழவந்தானில், அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். அதற்குள் எங்கள் வீட்டிலிருந்து, அண்ணன் வந்துவிட்டார். அண்ணனும், அப்பாவும் பேருந்தில் ஊருக்கு சென்றார்கள். நான் சைக்கிளில் சென்றேன். அப்பாவால் ஒரு மாதம் வரையில் எழுந்து நடக்க முடியவில்லை. அப்போது எங்களின் உறவினர் ஒருவர் ராணுவத்தில் இருந்து வந்திருந்தார்.
அவர் அப்பாவிற்கு, வலி தெரியாமல் இருக்க மது குப்பி ஒன்றை கொடுத்துவிட்டுப் போனார். அப்போதுதான் மது என்கிற பொருளைப்பற்றி தெரிந்துகொண்டேன். அதுவும் எதோ ஒரு மருந்து என்ற அளவில்தான். ஆனால் அதன்பிறகு, இறக்கும் வரை அவருக்கு அந்தவிபத்தினாலான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. எனவே நாங்கள் சென்னை செல்வது தாமதமாகியது.

ஒருமுறை எனது அம்மா, உறவினர் ஒருவரிடம் சென்று ஐம்பது ரூபாய்(1960களில் 50 ரூபாய் என்பது பெரிய தொகை) கடனாக கேட்டுள்ளார். அத்ற்கு அவர் “நாளை வா தருகிறேன்” என்று கூறி உள்ளார். சரியென்று அம்மாவும் அவருடைய வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.அப்போது அவர் தனது மனைவியிடம் ”இவர்களுக்கெல்லாம் கேட்டவுடன் கொடுத்தால் பணத்தின் அருமை தெரியாது. இரண்டு தடவை அலையவிட்டு கொடுத்தால்தான் தெரியும் என்று கூறியுள்ளார். இது அம்மாவின் காதில் விழுந்துள்ளதும் அன்றிலிருந்து அவர்கள் யாரிடமும் கடன் கேட்பது இல்லை. அதேபோல் நாங்கள், எங்களின் பாட்டி (அம்மாவுடைய அம்மா) வீட்டில் தான் இருந்தோம். மாமாவுக்கு இவர்கள் எங்கே இந்தவீட்டிலேயே த்ங்கிவிடப்போகிறார்கள் என்று
சந்தேகம்.. பல சமயங்களில். அந்தவீட்டில் ஒரு அறையில், கதவை பூட்டிவிட்டு, சுவற்றின் மேல்புறத்தில் ஒரு துளையின் வழியாக,தொட்டியில் நீரை ஊற்றுவதுபோல் நெல்லைக் கொட்டிவிடுவார்கள். அதேவீட்டில் நாங்கள் உணவின்றி பசியோடு
இருப்போம். அவர்தான் எங்களின் தாய்மாமன். பின்னர் ஒருநாள் எங்களை அந்த வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார். அனால் அவர் பாட்டிக்கு ஏதும் கொடுப்பது இல்லை. அவர் எங்கள் வீட்டில்தா சாப்பிட்டார். பாட்டிக்கு அவ்வளவு சொத்துகள் இருந்தும் அவரால் மகனை மீறி ஒன்றும் செய்ய முடியவில்லை.சொந்த ஊரிலேயே நாங்கள் வாடகைவீட்டில் குடியிருந்தோம். வாடகை மாதம் ஐந்து ரூபாய். பாட்டி இறந்தபோது அம்மா பாட்டிக்கு செய்யவேண்டிய ஆரம்ப சடங்குகளை செய்துகொண்டு இருக்கும்போது, மாமா வந்து நீங்கள் போகலாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி, வான வேடிக்கைகளுடன் பாட்டியின் இறுதி சடங்கை செய்தார். உயிருடன் இருக்கும்போது பாட்டிக்கு சோறுபோடாதவர், இறந்தவுடன் த்ற்பெருமைக்காக அவ்வாறு செய்தார். இவ்வாறான சூழ்நிலையில்தான் அம்மா எங்களை சென்னைக்கு அனுப்ப முடிவுசெய்தார்.

Thursday, August 19, 2010

ஏற்ற தாழ்வு


பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வேளையாக, மதுரையில் உள்ள எனது அக்கா வீட்டிற்கு சென்றேன். அன்று மாலை அவர்கள் எல்லோரும் ,அக்கா மகனுக்கு பெண் பார்க்க புறப்பட்டார்கள். அக்கா நீயும் வாடா என்றாள். சரி என்று நானும் புறப்பட்டேன். ஒரு வாடகை கார் எடுத்துக்கொண்டு எல்லோரும் புறப்பட்டோம். பெண்ணின் வீடு பங்களா போன்று இருந்தது. எல்லோரும் உள்ளே சென்றோம். எங்களை வற்வேற்று. அமரச்செய்தார்கள். நான் அங்கு இருந்த பத்திரிக்கை ஒன்றை
எடுத்து புரட்டிகொண்டிருந்தேன். அவர்கள் மாப்பிள்ளை, பெண்ணின் படிப்பு மற்றும் வேலை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.
அதில் ஒருவர் அக்காவிடம் ”இவர் யார்?” என்று கேட்டார். அத்ற்கு அக்கா “இவன் என் தம்பி, சென்னையில் இருக்கிறான்” என்றார்கள். அவர் உடனே அடுத்த கேள்வியை நேரடியாக என்னிடம் கேட்டார். “சென்னையில் என்ன செய்கிறீர்கள்?” என்றார். நான் சுருக்கமாக “ போக்குவரத்தில் பணிபுரிகிறேன்” என்று சொன்னேன். அவர் மீண்டும் விடுவதாக இல்லை. மேலும் எனக்கு இதுபோன்ற நிகழ்வுகள் முன்பே நடந்துள்ளது. “என்னவாக இருக்கிறீர்கள்?” என்றார். அத்ன்பிறகு நான் தயக்கமின்றி”நடத்துன்ராக இருக்கிறேன்” என்று கூறினேன்.
அப்போது அவர் முகம், நாம் வழியில் ஏதாவது அசிங்கத்தை மிதித்துவிட்டால் எப்படி மாறுமோ, அப்படி மாறியது. உண்மையில் நான்தான் அவரைப்பார்த்து அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், அவர் விற்பனைவரி அலுவலகத்தில் பணி புரிந்தார்.
அவருடைய உண்மையான வருமானத்தில் அவரால் இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி இருக்கமுடியாது. நானோ என்னுடைய உழைப்பில் கவுரவமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவன்.
இதுதான் உலகம். பின்னர் அந்த சம்பந்தம் நடைபெறவில்லை.
நான் அக்காவிடம்”இனிமேல் இம்மாதிரியான இடங்களுக்கு என்னை அழைக்காதே என்று கூறிவிட்டேன்.